வாஷிங்டன்,
உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக அலுவலகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக பதவியேற்ற பின்னர், குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்கி வருகிறார். மாணவர், வேலை, வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வகையான விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், சுற்றுலா அல்லது வர்த்தக விசாவில் அமெரிக்கா சென்று பின்னர் அகதி அந்தஸ்து கோரிய சுமார் 2 லட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நேற்று முதல் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க அரசின் நலத்திட்டங்களை சார்ந்து வாழக்கூடிய வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களை கண்டறிந்து,
அவர்களின் விசா விண்ணப்பங்களை நிராகரிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விசா விண்ணப்பங்களை மிகவும் விரிவாகவும் தீவிரமாகவும் ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.விசா நேர்காணல்கள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.