கன்பரா,
ஆஸ்திரேலியாவில் ரக்பி விளையாட்டு ரசிகர்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
ஆஸ்திரேலியாவில் பிரபலமான விளையாட்டுகளில் ரக்பியும் ஒன்றாகும். இந்நிலையில், அந்நாட்டின் நியூகஸ்டல் நகரில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான ரக்பி தொடர் நடைபெற்று வருகிறது.
இதில், இறுதிப்போட்டிக்கு நியூகஸ்டல் நைட்ஸ் - சிட்னி ரோஸ்டர்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன. இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.
முன்னதாக இறுதிப்போட்டிக்குள் நியூகஸ்டல் அணி நுழைந்ததை கொண்டாடும் வகையில் நேற்று அந்நகரில் உள்ள முக்கிய சாலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ரக்பி ரசிகர்கல் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, அந்த கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்தது. இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், கூட்டத்திற்குள் காரை மோதச்செய்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இளைஞரின் பெயர் உள்ளிட்ட விவரம் இதுவரை வெளியாகவில்லை.