டெஹ்ரான்,
ஈரானில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சக்கரம் கழன்று விழுந்ததால், என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் கடுமையாக குலுங்கியது. இதனால் பயத்தில் பயணிகள் அலறியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் மஷாத் நகரில் இருந்து கெர்மன்ஷா என்ற நகருக்கு செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. விமானம் ஓடுதளத்தில் இருந்து நடுவானில் எழும்பிய சில நிமிடங்களிலேயே, அதன் டயர்களில் ஒன்றின் வெளிப்புற பகுதி பிரிந்து வந்தது. இதனால், விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டு, விமானம் நடுவானில் மிக கடுமையான அதிர்வுடன் பயங்கரமாக குலுங்க தொடங்கியது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து குலுங்கியதால், உள்ளே இருந்த பயணிகள் மரண பயத்தில் அலறினர். இந்த அதிர்வின் காரணமாக, பயணிகள் அமர்ந்திருந்த கேபின் பகுதியின் உட்புற மேற்கூரைகள் பெயர்ந்து கீழே விழுந்தன. மேலும், உடமைகள் வைக்கும் பெட்டிகள் தானாக திறந்து, அதிலிருந்த பைகள் மற்றும் பொருட்கள் பயணிகள் மீது விழுந்தன. இதனால் விமானத்திற்குள் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
இதையடுத்து, இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த விமானி, உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். பின்னர், அதிர்ஷ்டவசமாக விமானம் மீண்டும் மஷாத் விமான நிலையத்திற்கே கொண்டு வரப்பட்டு பத்திரமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, விமானம் குலுங்கியபோது உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் அலறியடிக்கும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.