உலக செய்திகள்

பயங்கரவாத ஊக்குவிப்பு; டெலிகிராம் நிறுவனருக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்த ரஷியா

அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் அளவிலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என ரஷிய ஊடகம் தெரிவிக்கின்றது.

மாஸ்கோ

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக ரஷியா சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்து உள்ளது.

இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் மேற்பட்டோர் டெலிகிராம் பயனாளர்களாக உள்ளனர். உலகம் முழுவதும் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர் கோடிக்கணக்கில் உள்ளனர்.

கைது வாரண்ட்

இந்த நிலையில், ரஷியாவின் மத்திய பாதுகாப்பு சேவை அமைப்பு வெளியிட்ட செய்தியில், டெலிகிராம் நிறுவனர் மற்றும் டெலிகிராம் நிர்வாகத்தின் தலைவரான பாவெல் துரோவ் மீது ரஷிய குற்ற சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

விசாரணையில் உள்ள குற்ற வழக்கின் ஒரு பகுதியாக (பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பாடு) அவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. அவருக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.

ஆயுள் தண்டனை

இதன்படி, இன்டர்போல் உள்பட பல வழிகளில் அவரை ரஷியாவுக்கு நாடு கடத்த கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய ரஷிய கோர்ட்டும் வாரண்ட் பிறப்பித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் அளவிலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என ரஷிய ஊடகம் தெரிவிக்கின்றது.