போர் கப்பல் திரிசூல் 
உலக செய்திகள்

இந்திய கடற்படையின் போர் கப்பல் திரிசூல் கிரீஸ் சென்றடைந்தது

இரு நாட்டு கடல்சார் உறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய பயணம் அமைந்துள்ளது.

ஏதேன்ஸ்,

மத்திய தரைக்கடல் பகுதியில் நீண்டதூர பயணத்தை மேற்கொண்டு வரும் இந்திய கடற்படையின் அதிநவீன போர்க்கப்பலான 'திரிசூல்', நேற்று கிரீஸ் நாட்டின் சௌடா விரிகுடா துறைமுகத்தை சென்றடைந்தது. இரு நாட்டு கடல்சார் உறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய பயணம் அமைந்துள்ளது.

கூட்டு பயிற்சி

இந்த துறைமுக பயணத்தின் போது, இந்திய மற்றும் கிரீஸ் கடற்படைகளுக்கு இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய பயிற்சி நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில், இரு நாட்டு கடற்படை பணியாளர்களும் பங்கேற்கும் உயர்நிலை தொழில்முறை விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் இரு நாடுகளின் கலாச்சாரத்தை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறவுள்ளன.

போர் நினைவிடத்தில் அஞ்சலி

இதனை தொடர்ந்து, சௌடா விரிகுடாவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க போர் நினைவிடத்திற்கு செல்லும் இந்திய கடற்படை குழுவினர், அங்கு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்த உள்ளனர்.

பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி

மேலும், இந்த துறைமுக பயணத்தின் சிறப்பம்சமாக, இந்திய போர்க்கப்பல் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் நாட்களில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் கப்பலுக்குள் சென்று பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயணம் இந்திய - கிரேக்க கடற்படைகளுக்கு இடையே உள்ள நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதோடு, இரு நாட்டு ராணுவ ரீதியிலான தொழில்முறை தொடர்புகளையும் பெருமளவில் மேம்படுத்தும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT