அபுதாபி,
அபுதாபியில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை தொடங்குகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் மந்திரிகள் பங்கேற்கின்றனர்.
அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகள் தங்களது பிரத்யேக அரங்குகளை அமைக்கின்றன. எரிசக்தி துறையில் தடம் பதித்து வரும் உலகளாவிய 2,260 நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
இந்த நிகழ்வை நேரில் பார்வையிட 170-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 39 ஆயிரத்திற்கும் அதிகமான சர்வதேச வல்லுநர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கண்காட்சியை நடத்தும் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டோபர் ஹட்சன் கூறியதாவது:-
"இந்த கண்காட்சியையொட்டி நடக்கும் கருத்தரங்கில் உலகத்தரம் வாய்ந்த எரிசக்தி வல்லுநர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். தொடக்க விழாவில் அமீரக தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப துறை மந்திரி சுல்தான் பின் அகமது சுல்தான் அல் ஜாபர் முக்கிய உரையாற்றுகிறார்."
அதேபோல் அமீரக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு துறை மந்திரி சுகைல் பின் முகம்மது அல் மஸ்ரூயி மற்றும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் மந்திரிகள், சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகின்றனர். எதிர்காலத் திட்டம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான முக்கிய விவாதங்களும் அரங்கேறுகின்றன.
உலக தலைவர்கள் மற்றும் முக்கிய விஐபிக்கள் அபுதாபியில் குவிந்து வருவதால், போலீசார் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மொத்தம் 4 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி வருகிற 5-ந் தேதி நிறைவடைகிறது.