மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படையில் 13 மாத வயதுடைய ‘கொமாண்டோ’ என்ற குட்டி நாய் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
21 செ.மீ. உயரமும், சுமார் 7 கிலோ எடையும் கொண்ட கொமாண்டோ, பாதுகாப்புப் படையின் மிகச்சிறிய நாய் உறுப்பினர் என்ற சிறப்பை பெற்றுள்ளது. கொமாண்டோவை அதன் வயதான உரிமையாளர்களால் தொடர்ந்து பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, சுமார் 6 மாதங்களுக்கு முன்பு மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படையினர் தத்தெடுத்தனர்.
தற்போது ஜெர்மன் ஷெப்பர்ட், லாப்ரடார் உள்ளிட்ட பெரிய ரக நாய்களுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக கொமாண்டோ பயிற்சி பெற்று வருகிறது. பெரிய நாய்கள் செல்ல முடியாத குறுகிய இடுக்குகள் மற்றும் சிறிய பகுதிகளுக்குள் சென்று ஆய்வு செய்வதில் கொமாண்டோ முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கொமாண்டோவுக்கு பிரத்யேகமாக சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட தந்திரமான மேல்சட்டை, பாதுகாப்பு கண்ணாடிகள், ஹெல்மெட் மற்றும் கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், மெக்சிகோவின் சுதந்திர தின அணிவகுப்பிலும் கொமாண்டோ பங்கேற்றுள்ளது. பள்ளிகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறது. இதன் மூலம் தேசிய பாதுகாப்புப் படையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே நெருக்கமான மற்றும் நேர்மறையான பிம்பத்தை உருவாக்கும் முயற்சியிலும் கொமாண்டோ இடம்பெற்று வருகிறது.