உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,328 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 13,328 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் தீவிரம் அடைந்து வருகிறது. அங்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 250-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரம்ஜானைத் தொடர்ந்து மசூதிகளில் மக்கள் கூடுவார்கள் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த பல நிபந்தனைகளை பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசு, ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட முடியாமல் திணறி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 13,328 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 13,328 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. 3,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6,391 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை 1,50,756 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று கூறினர்.