வாஷிங்டன்,
அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இடைக்காலத் தேர்தல் எனப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் முடிவுகள் ஜனாதிபதியின் எஞ்சிய ஆட்சிக்காலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனால் இந்த தேர்தல் உலகம் முழுவதும் உற்று நோக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றினால் நாடாளுமன்றத்தில் அதிகார சமநிலை மாறும்.
இந்திய நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட்சபையின் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று அதிகாலை முடிந்தது.
வாக்குப்பதிவு முடிந்ததுமே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஆரம்ப கட்ட தேர்தல் முடிவுகளின்படி ஜனநாயக கட்சி முன்னிலை பெற்றது. டிரம்பின் குடியரசுக்கட்சி பின்னடைவை சந்தித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி டிரம்பின் குடியரசு கட்சி 44 இடங்களைப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், ஜனநாயக கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 50 இடங்களை கடந்து 54 இடங்களைப் பெற்று செனட் சபையை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தலில் குடியரசு கட்சியின் தோல்விக்கு 4 முக்கிய காரணங்கள் இருப்பதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிக அளவில் வாக்கு செலுத்தாததால் இந்த தோல்வி ஏற்படவில்லை. மாறாக 2024 ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சிக்கு வாக்களித்த கணிசமான மக்கள், நவம்பர் 3-ந்தேதி நடந்த இடைத்தேர்தலில் அதே குடியரசு கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இது குறித்து வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், குடியரசு கட்சியின் தோல்விக்கு 4 முக்கிய காரணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் முதலாவது ஈரானுடனான போரை முடிக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இரண்டாவது விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
மற்ற இரண்டு காரணங்களாக இருப்பது ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கு புத்துயிர்ப்பு அளிக்க வேண்டும் மற்றும், இஸ்ரேல் உடனான வாஷிங்டனின் உறவில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் ஆகும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.