மெல்போர்ன்,
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக இந்தோனேசியா பயணத்தை நிறைவு செய்த அவர், அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியா சென்றடைந்தார். அப்போது மெல்போர்ன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இந்தியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ககன்யான்' விண்வெளித் திட்டத்தில் இணைவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு ஆதரவாக, கோகோஸ் தீவுகளில் தற்காலிக விண்வெளி கண்காணிப்பு நிலையத்தை அமைக்கவும் ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், அணுசக்தி, கடல்பாதுகாப்பு போன்ற முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
முன்னதாக இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி - ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இணைந்து பங்கேற்றனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மார்வெல் மைதானத்தில் நடைபெற்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றியபோது பிரதமர் மோடி கூறியதாவது;-
“வணக்கம் மெல்போர்ன்! வீட்டில் இருக்கும் பால் ஆஸ்திரேலிய பாலாக இருக்கலாம், ஆனால் அதில் போடப்படும் டீ இந்தியத் தேநீர். பருப்பும் காய்கறிகளும் ஆஸ்திரேலியாவினுடையதாக இருக்கலாம், ஆனால் அவை அசல் இந்திய மசாலாப் பொருட்களால் தாளிக்கப்படுகின்றன.
இந்தியா உதவிக் கரம் நீட்டும்போது, பாஸ்போர்ட்களைப் பார்ப்பதில்லை. இந்தியா உதவிப் பொருட்களை அனுப்பும்போது, பாஸ்போர்ட்டின் நிறத்தையும் பார்ப்பதில்லை. அதனால்தான் உலகம் இந்தியாவின் மீது இவ்வளவு பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது.
நமது பாதுகாப்பு கட்டமைப்பின் திறனையும், நம்பகத்தன்மையையும் உலகம் அறிந்து வருகிறது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது நமது செயல்பாடுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன; அவற்றின் எதிரொலிகள் உலகம் முழுவதும் ஒலித்தன. பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைக் கண்டு நீங்கள் பெருமிதம் கொண்டீர்களா?" என்று பிரதமர் மோடி பேசினார்.