லாகூர்
அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்திற்கு வருகை தந்துள்ளனர்.
அப்போது, காலிப் நிருபர்களிடம் கூறும்போது, அமெரிக்கர்களுடனான எங்களுடைய அமைதி பேச்சுவார்த்தை எப்போதும் தோல்வியிலும், வாக்குறுதி விதிமீறல்களிலும் முடிவடைகிறது. அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையே அவர்கள் 2 முறை எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். எங்களுக்கு நல்லெண்ணம் உள்ளது. ஆனால், நம்பிக்கையே இல்லை என்றார்.
காலிப் பயணித்த சிறப்பு விமானத்தில், மினாப் நகரில் பலியான பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்கள் எடுத்து வரப்பட்டன. இந்த விமானத்தில் என்னுடைய நண்பர்கள் உள்ளனர் என அதனை பற்றி அவர் எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த குழுவில் பாதுகாப்பு, அரசியல், ராணுவம், பொருளாதாரம் மற்றும் சட்டம் தொடர்பான குழுவினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் வந்துள்ளனர்.
இதேபோன்று, ஈரானின் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, ஈரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி அக்பர் அகமதியன், ஈரானின் மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி ஆகியோருடன், ஈரான் நாடாளுமன்றத்தின் பல்வேறு உறுப்பினர்களும் வருகை தந்துள்ளனர்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதித்து உள்ளது.
இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதனை தொடர்ந்து, ஈரான் நாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் பாகிஸ்தானுக்கு தனி விமானத்தில் வந்துள்ளனர். அமெரிக்க பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வரவுள்ளனர்.