உலக செய்திகள்

20 ஆண்டுகளாக வாலிபரின் வயிற்றுக்குள் இருந்த ‘தெர்மோ மீட்டர்’ அகற்றம்

சீனாவில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் தெரியாமல் ஏதேனும் பொருட்களை விழுங்கிவிட்டு மருத்துவமனைக்கு வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பீஜிங்,

நாம் தெரியாமல் ஒரு பொருளை விழுங்கிவிட்டால் அது ஜீரணமாகிவிடும் அல்லது வெளியே வந்துவிடும் என்ற பொதுவான நம்பிக்கையை உடைத்திருக்கிறது சீனாவில் நடந்துள்ள ஒரு விசித்திரமான சம்பவம். ஒரு மனிதனின் வயிற்றுக்குள் 20 ஆண்டுகளாக ஒரு தெர்மோமீட்டர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்திருப்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் தென்கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள வென்சோநகரைச் சேர்ந்த 32 வயதான வாங் என்பவருக்குத்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், வென்சோ மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றை பரிசோதித்த டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, சிறுகுடலின் தொடக்கப் பகுதியான 'டியோடினம்' என்ற இடத்தில் ஒரு நீண்ட கூர்மையான பொருள் இருப்பதை கண்டறிந்தனர்.

அது ஒரு பாதரச தெர்மோமீட்டர் என்பதை உறுதி செய்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த தெர்மோமீட்டரின் முனை குடல் சுவரை நேரடியாக அழுத்திக் கொண்டிருந்ததால், எந்த நேரத்திலும் குடலில் ஓட்டை விழுந்து உள் ரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் இருந்தது.

இந்த பரிசோதனை முடிவுக்கு பிறகு, டாக்டர்கள் அவரிடம் இதுகுறித்து கேட்டறிந்தனர். அப்போது அவர், "எனக்கு 12 வயதாக இருக்கும்போது தற்செயலாக இந்த தெர்மோமீட்டரை விழுங்கிவிட்டேன். அதனை பெற்றோர்களிடம் சொன்னால் திட்டுவார்கள் என்ற பயத்தில் நான் யாரிடமும் சொல்லவில்லை. எந்த வலியும் இல்லாததால் நாளடைவில் அதை அப்படியே மறந்துவிட்டேன்" என்றார்.

பின்னர் அறுவை சிகிச்சை செய்து வயிறுக்குள் இருந்து தெர்மோமீட்டரை வெளியே எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி இந்த சிக்கலான ஆபரேஷனை டாக்டர்கள் மிக நுணுக்கமாகக் கையாண்டனர். தெர்மோமீட்டர் பித்த நாளங்களுக்கு மிக அருகில் இருந்ததால், மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வெறும் 20 நிமிடங்களில் அதனை வெளியே எடுத்தனர்.

வெளியே எடுக்கப்பட்ட அந்தத் தெர்மோமீட்டர் 20 ஆண்டுகளுக்கு பிறகும் உடையாமல் அப்படியே முழுமையாக இருந்தது. அதில் இருந்த அளவீட்டு எண்கள் மட்டும் தேய்ந்து மறைந்து போயிருந்தன. ஒருவேளை அது உடைந்திருந்தால், அதிலிருந்த பாதரசம் உடலுக்குள் பரவி உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். "அவர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி" என்று டாக்டர்கள் கூறினர்.

52 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த டூத் பிரஷ் அகற்றம்:

சீனாவில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் தெரியாமல் ஏதேனும் பொருட்களை விழுங்கிவிட்டு மருத்துவமனைக்கு வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. "தெரியாமல் எதையாவது விழுங்கிவிட்டால், உடனடியாக சாப்பிடுவதையும் குடிப்பதையும் நிறுத்திவிட்டு. தாமதிக்காமல் டாக்டரை அணுக வேண்டும்" என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதேபோல கடந்த ஆண்டு சீனாவில் 64 வயது முதியவர் ஒருவரின் வயிற்றிலிருந்து. அவர் 12 வயதில் விழுங்கிய 'டூத் பிரஷ்' 52 ஆண்டுகளுக்குப் பிறகு அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.