உலக செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

சர்வதேச நீர்வழிகளை பயன்படுத்தி உலக நாடுகளை குறுகிய காலத்திற்கு மிரட்டலாம் என்பது தவிர்த்து, அவர்களிடம் வேறு எதுவும் இல்லை என குறிப்பிட்டார்.

வாஷிங்டன் டி.சி.

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய தாக்குதல் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்தது.

இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதனை ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. இதனை தொடர்ந்து, ஈரான் நாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் பாகிஸ்தானுக்கு தனி விமானத்தில் வந்துள்ளனர். அமெரிக்க பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, ஈரானியர்களிடம் வேறு எதுவும் இல்லை என்று உணரவே அவர்கள் மறுக்கிறார்கள். சர்வதேச நீர்வழிகளை பயன்படுத்தி உலக நாடுகளை குறுகிய காலத்திற்கு மிரட்டலாம் என்பது தவிர்த்து, அவர்களிடம் வேறு எதுவும் இல்லை என குறிப்பிட்டார்.

அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர்கள் இன்று உயிருடன் இருக்கிறார்கள் என தெரிவித்து உள்ளார். போரை விட, பொய் செய்தி ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றை கையாள்வதில் ஈரான் அரசு நிர்வாகத்தினர் சிறந்தவர்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

டிரம்ப் வெளியிட்ட மற்றொரு செய்தியில், அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டால், ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது. அதற்காக சிறந்த ஆயுதங்கள் காத்திருக்கின்றன என எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாங்கள் இதுவரை தயாரிக்கப்படாத சிறந்த வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் ஏற்றி கொண்டு கப்பலில் தயாராக இருக்கிறோம். இதற்கு முன் நடந்த தாக்குதலை விட தீவிர தாக்குதலாக அது இருக்கும். அவற்றை வெடிக்க செய்வோம் என்றும் மிரட்டலாக கூறியுள்ளார்.