தெஹ்ரான்,
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் ஆயுத வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஈரான் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததை தொடர்ந்து 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தெஹ்ரானுக்கு மேற்கே உள்ள கராஜ் நகரில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்பில் இருந்துகொண்டு ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபட்டதாக கூறி பலர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை கொண்டு பொது சொத்துக்களுக்குத்தீ வைத்ததாகவும், மின் துணை நிலையத்தை தாக்கி மின்தடையை ஏற்படுத்தியதாகவும் ஈரான் நீதித்துறை குற்றம் சாட்டியிருந்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஹசன் தியோபண்ட், ஹமீத் காசெமி மற்றும் ரெசா ஸன்கானே ஆகிய மூவருக்கும் கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இவர்களது மேல்முறையீட்டை விசாரித்த ஈரான் நீதிமன்றம், மூவரின் மரண தண்டனையையும் உறுதி செய்தது. இதனையடுத்து இன்று மூவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானின் அதிகாரப்பூர்வ நீதித்துறை ஊடகம் அறிவித்துள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 10 பேருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.