உலக செய்திகள்

இந்தியாவில் விரைவில் 6ஜி சேவை - பிரதமர் மோடி பேச்சு

கடந்த 12 ஆண்டுகளில் 3வது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வருகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, மார்வெல் மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நிலையில் ‘வணக்கம் மெல்போர்ன்' என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.

உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக இந்தோனேசியா பயணத்தை நிறைவு செய்த அவர், அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியா சென்றடைந்தார். அப்போது மெல்போர்ன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இந்தியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ககன்யான்' விண்வெளித் திட்டத்தில் இணைவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு ஆதரவாக, கோகோஸ் தீவுகளில் தற்காலிக விண்வெளி கண்காணிப்பு நிலையத்தை அமைக்கவும் ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், அணுசக்தி, கடல்பாதுகாப்பு போன்ற முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

முன்னதாக இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி - ஆஸி. பிரதமர் இணைந்து பங்கேற்றனர். ஆஸ்திரேலியா, மெல்போர்ன் மார்வெல் மைதானத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வணக்கம் மெல்போர்ன்

ஆஸி.,யில் இந்திய சமூகத்தினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,

"வணக்கம் மெல்போர்ன்! வீட்டில் இருக்கும் பால் ஆஸ்திரேலியப் பாலாக இருக்கலாம், ஆனால் அதில் போடப்படும் டீ இந்தியத் தேநீர். பருப்பும் காய்கறிகளும் ஆஸ்திரேலியாவினுடையதாக இருக்கலாம், ஆனால் அவை அசல் இந்திய மசாலாப் பொருட்களால் தாளிக்கப்படுகின்றன.

இந்தியா உதவிக் கரம் நீட்டும்போது, பாஸ்போர்ட்களைப் பார்ப்பதில்லை. இந்தியா உதவிப் பொருட்களை அனுப்பும்போது, பாஸ்போர்ட்டின் நிறத்தையும் பார்ப்பதில்லை. அதனால்தான் உலகம் இந்தியாவின் மீது இவ்வளவு பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது.

உணர்ச்சி பூர்வமானது

கடந்த 12 ஆண்டுகளில் 3வது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வருகிறேன். இந்தியா - ஆஸி. இடையேயான கிரிக்கெட் உறவு உணர்ச்சி பூர்வமானது

விண்வெளிக்கு தயாராகும் `ககன்யான்'

இந்தியா தனது ‘ககன்யான்' விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. மேலும் தனது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவும் இலக்கை நோக்கியும் செயல்பட்டு வருகிறது.

6ஜி தொழில்நுட்பம் விரைவில் இந்தியாவில் வரப்போகிறது.

ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் திறந்து வருகின்றன. டீக்கின் மற்றும் வொல்லோங்காங் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே வளாகங்களைத் தொடங்கி விட்டன. மேலும் பல ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் இந்தத் திசையில் முன்னேறி வருகின்றன

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செல்போன் டார்ச்களை ஒளிர விடுமாறு கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி. உடனே அனைவரும் தங்களது மொபைல் டார்ச்களை ஒளிர விட்டனர் இதனை உணர்ச்சிப் பெருக்குடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஏற்றுக்கொண்டார்.