உலக செய்திகள்

பிரான்சில் சூறாவளி தாக்குதல்: கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயம்

பிரான்சின் தென்மேற்குப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ்,

பிரான்ஸ் நாட்டில் சூறாவளி தாக்கியதில் கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயமடைந்தனர். இவர்களில் 15 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் உள்ள பொமாஸ் கிராமத்தில் சுமார் 1000 பேர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை 05.30 மணி அளவில் மணிக்கு 117 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்த கிராமம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இந்த பலத்த காற்றால் வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சுமார் 300 வீடுகள் சேதமடைந்தன. வேரோடு மரங்கள் சாய்ந்தும், வீடுகள் இடிந்தும் மற்றும் வாகனங்கள் சேதமடைந்து காணப்பட்டன.

மீட்பு குழு

மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த 41 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் கர்ப்பிணி பெண் உட்பட 15 பேரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பைரனீஸ் மலைப்பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததன் காரணமாக, தென்மேற்கு பிரான்ஸ் மாகாணத்தில் நடைபெற இருந்த வுல்டா எஸ்பானா சைக்கிள் பந்தயம் ரத்து செய்யப்பட்டது. போர்டோ, மார்சேய், நைஸ், துலூஸ் உள்ளிட்ட நகரங்களிலும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.