உலக செய்திகள்

பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பில் ஆலோசிக்க போவது என்ன?

இரு நாடுகளின் உறவுகளில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் இந்த விரிவான ஆலோசனை நடைபெற உள்ளது

பிரான்ஸ்,

பிரதமர் நரேந்திர மோடி -அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பில், இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்வது, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் முக்கிய கனிம வளத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் முக்கியமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளின் உறவுகளில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் இந்த விரிவான ஆலோசனை நடைபெற உள்ளது. முன்னதாக, ஜி7 மாநாட்டு தலைவர்களின் சந்திப்பில் மோடி மற்றும் டிரம்ப் மரியாதை நிமித்தமாக சந்தித்து சுருக்கமாக உரையாடினர். கடந்த 16 மாதங்களில் இருவரும் நேரில் சந்தித்த முதல் நிகழ்வு இதுவாகும்.

உறவில் சிக்கல்

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் சுங்க வரி விதித்ததும், இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை தலையிட்டு நானே முடிவுக்கு கொண்டு வந்ததாக டிரம்ப் கூறியதும் இருதரப்பு உறவில் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தம் இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையின் விளைவாகவே ஏற்பட்டது என்றும், அதில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கை மற்றும் எச்-1பி விசா கட்டண உயர்வும் இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்திய மாலுமிகள் உயிரிழப்பு

இதையடுத்து, கடந்த சில மாதங்களாக இரு தரப்பும் உறவுகளை சீரமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையிலான வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. ஆனால், ஓமன் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் கடந்த வாரம் இருநாட்டு உறவில் புதிய சிக்கலை ஏற்படுத்தியது. ஈரான் துறைமுகங்களுக்கு விதித்திருந்த கடல் முற்றுகையை மீற முயன்றதாக கூறி மூன்று வர்த்தகக் கப்பல்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நடைபெற்றது.

டிரம்ப் உடன் சந்திப்பு

இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி ஜேசன் மீக்ஸை அழைத்து விளக்கம் கேட்டது. இந்திய மாலுமிகள் பணியாற்றிய கப்பல்கள் மீது நடத்தப்பட்ட உயிரிழப்பை ஏற்படுத்திய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் இந்தியா தெரிவித்தது. இந்த விவகாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவிடம் எழுப்பியிருந்தார். இத்தகைய பரபரப்புக்கு மத்தியில்தான், மோடி- டிரம்ப் சந்திப்பு இன்று நடைபெற உள்ளது.

ஜி 7 மாநாடு

இந்தியா சிறப்பு அழைப்பு நாடாக பங்கேற்றுள்ள ஜி7 மாநாட்டில் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளது.உலகளாவிய பொருளாதாரம், நிதி மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் குறித்து விவாதித்து, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முக்கிய தளமாக ஜி7 அமைப்பு செயல்பட்டு வருகிறது.