ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் உடற்பயிற்சி கூடத்தின் 3-வது மாடியில் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த இளம்பெண், நிலைதடுமாறி திறந்திருந்த ஜன்னல் வழியே கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மாகாணத்தில் உள்ள பொன்டியானாக் நகரைச் சேர்ந்தவர் பாத்தியா (வயது 22). இவர் தனது தோழி மற்றும் தம்பியுடன் அங்குள்ள 'கே-ஜிம்' என்ற உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு 3-வது மாடியில் இருந்த டிரெட்மில் இயந்திரத்தில் ஏறி பாத்தியா உடற்பயிற்சி செய்யத் தொடங்கினார். சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்து ஓடிய அவர், பின்னர் இயந்திரத்தின் வேகத்தைக் குறைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் திடீரென நிலைதடுமாறி பின்னோக்கி விழுந்தார்.
டிரெட்மில் இயந்திரத்திற்கும், பின்னால் இருந்த ஜன்னலுக்கும் இடையே வெறும் 2 அடி இடைவெளி மட்டுமே இருந்துள்ளது. மேலும், தரைமட்டத்திலிருந்து வெறும் 30 சென்டிமீட்டர் உயரத்தில் இருந்த அந்த ஜன்னல் திறந்து வைக்கப்பட்டிருந்தது.நிலைதடுமாறி விழுந்த பாத்தியா, நேராக அந்த ஜன்னல் வழியே 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதிக ரத்தப்போக்கு காரணமாக பாத்தியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடற்பயிற்சி கூடத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை அதிகாரிகள் தற்காலிகமாக மூடி சீல் வைத்தனர். மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டதாக ஜிம் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.