ஹூஸ்டன்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அப்துல்லாபூர்மேடு பகுதியை சேர்ந்தவர் அனுரூப் ரெட்டி (வயது 23). அவர் குருநானக் கல்வி மையத்தில் பி.டெக் முடித்து விட்டு, மேல்படிப்புக்காக 2024-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். பின்னர், நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை படித்து முடித்தார். அடுத்து வேலையில் சேருவதற்காக தயாரானார்.
இந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து குளித்து, பொழுதுபோக்குவதற்காக டொலிடோ பென்ட் பகுதியிலுள்ள அணைக்கு சென்றார். அவருடன் 5 நண்பர்களும் சென்றிருந்தனர். அவர் சிறந்த நீச்சல் வீரரும் ஆவார். இந்த நிலையில், நண்பர்களில் சிலர் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, 3 பேர் தவறி நீருக்குள் விழுந்து விட்டனர். உடனடியாக அவர்களை காப்பற்றுவதற்காக அனுரூப் ரெட்டி நீருக்குள் குதித்து, நீந்தி சென்று அவர்களை ஒருவர் பின் ஒருவராக மீட்டு வெளியே கொண்டு வந்து சேர்த்துள்ளார்.
ஆனால், அவர் கரையேறுவதற்காக முயன்றபோது, நீரில் மூழ்கியிருந்த மீன்பிடி வலையில் அவருடைய கால் சிக்கி கொண்டது என கூறப்படுகிறது. இதனால், அவரால் வெளியே வர முடியவில்லை. அப்போது அணையில் நீரோட்டம் அதிகரித்து இருந்தது. இதனால், அவர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர் வந்து நீண்ட நேரம் தேடி 20 அடி ஆழத்தில் இருந்த அவருடைய உடலை மீட்டனர். ஹூஸ்டனிலுள்ள இந்திய தூதரகம் அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், உடலை இந்தியா கொண்டு செல்வதற்கான உதவிகளை செய்து வருகிறது.