உலக செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேச்சு

இந்தியா-பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பேசியுள்ளார்.

வாஷிங்டன்,

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆண்டு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார். இதை தற்போதைய தேர்தல் பிரசார கூட்டத்தில் மீண்டும் அவர் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, 'இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள். ஆனால், 'நண்பர்களே, நீங்கள் தாக்கிக்கொண்டே இருந்தால், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது. உங்கள் மீது மிகவும் அதிக வரி விதிப்பேன், 250 சதவீதம் வரை விதிக்கப்படும். அதனால் நீங்கள் எந்த வணிகமும் செய்ய முடியாது' என்று கூறினேன்' என்று குறிப்பிட்டார்.

இந்த போரில் 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறிய டிரம்ப், இந்தப்போர் உள்பட 8 போர்களை நிறுத்தியதாகவும், ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கவில்லை என்றும் குறைபட்டுக்கொண்டார். ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதில் 3-வது நாட்டுக்கு தொடர்பு இல்லை என இந்தியா தொடர்ந்து கூறி வரும் நிலையில், டிரம்பின் இந்த பேச்சு மீண்டும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

SCROLL FOR NEXT