மாஸ்கோ,
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் தொலைபேசி மூலம் பேசினார்கள். துருக்கியில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்க உள்ள நேட்டோ உச்சி மாநாட்டில் டிரம்ப் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசியுள்ளனர். தொலைபேசி உரையாடலின் போது அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தையொட்டி, அதிபர் டிரம்புக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.சுமார் 90 நிமிடம் அவர்கள் இருவரும் உரையாடினார்கள்.
அவர்கள் இருவரின் உரையாடல் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-டிரம்ப் - புதின் ஆகியோரின் உரையாடல் வர்த்தக ரீதியாகவும், மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது.உக்ரைனுடனான போரை விரைவாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுவதாக அதிபர் டிரம்ப் கூறினார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் 4-வது முறையாக பேசி உள்ளனர். இதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனும் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது போர்க்கள நிலவரங்கள், அமைதி பேச்சுவார்த்தை, ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தைக்கு புத்துயிர் அளிப்பதில் அமெரிக்கா ஆற்றக்கூடிய பங்கு ஆகியவை குறித்தும் அவர்கள் பேசினார்கள்.
துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் டிரம்ப், நாளை மறுநாள் (புதன்கிழமை) உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் சிரியா அதிபர் அகமது அல் ஷாரா ஆகியோரை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.அவர்கள் சந்தித்துப் பேச இருப்பதை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மாநாட்டின் போது நாளை துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனையும் டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ளார். 8-ந்தேதி அமெரிக்கா திரும்புவதற்கு முன்பு, டிரம்ப் நிருபர்களையும் சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார்.