வாஷிங்டன்,
பிரபஞ்சத்தில் நமது பூமியைப் போலவே ஏராளமான கிரகங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் அங்கு ஏதேனும் உயிர்கள் வாழ்கின்றனவா? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. வேற்று கிரக வாசிகள்(Aliens) குறித்தும், பறக்கும் தட்டுகள்(UFO's) குறித்தும் ஏராளமான கதைகள் நிலவி வந்தாலும், எந்த கதையும் இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியின்போது, வானில் அவ்வப்போது பறக்கும் தட்டுகள் தென்படுவதாக பலர் கூறுவது குறித்தும், இது தொடர்பாக இதுவரை ஏதாவது அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதா? என்றும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டிரம்ப், “இது போன்ற விஷயங்களில் எனக்கு பெரிதாக நம்பிக்கை கிடையாது. ஆனால் அமெரிக்க விமானப்படை அதிகாரிகளிடம் நான் ஒருமுறை பேசியபோது, அவர்கள் என்னிடம் ஒரு தகவலை கூறினார்கள். அவர்கள் யாரும் சதிக் கோட்பாடுகள்(Conspiracy Theories) பற்றி பேசும் நபர்கள் இல்லை. அனைவரும் தலைசிறந்த விமானிகள்.
அவர்கள் எப்-22(F-22) ரக போர் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பறக்கும் தட்டை பார்த்ததாக என்னிடம் கூறினார்கள். எப்-22 என்பது மிகச்சிறந்த போர் விமானம். ஆனால் அவர்கள் பார்த்த பறக்கும் தட்டு, எப்-22 விமானத்தை விட சுமார் 3 மடங்கு வேகமாக சென்றுள்ளது. அது வழக்கமான விமானத்தைப் போல் இல்லாமல் வட்ட வடிவத்தில் இருந்ததை விமானிகள் கவனித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
இருப்பினும் இந்த தகவலை தன்னிடம் கூறிய விமானிகள் யார் என்பது குறித்த விவரங்களை டிரம்ப் வெளியிடவில்லை. இதைத் தொடர்ந்து டிரம்பிடம், ‘அமெரிக்க அதிபருக்கு தெரியாமலேயே பறக்கும் தடுகள் குறித்து ஆய்வு நடந்து வருவதாக சிலர் கூறுகிறார்களே?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டிரம்ப், “இல்லை. அப்படி எதுவும் நடப்படதாக நான் கேள்விப்படவில்லை. ஒருவேளை அப்படி ஏதும் ஆய்வு நடந்து கொண்டிருந்தால், இந்த பேட்டி முடிந்த உடனேயே நான் அது குறித்து விசாரித்து கண்டுபிடித்து விடுவேன்” என்று தெரிவித்தார்.