டெஹ்ரான்,
மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், 4 வாரங்களாக தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிரம்ப் நேற்று அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஈரானின் ஒரு உயர்ந்த நபருடன் நாங்கள் பேசி வருகிறோம். அவர் மிகவும் மரியாதைக்குரியவர் மற்றும் தலைவர் என நம்புகிறேன். அதேநேரம் தற்போதைய உச்சபட்ச தலைவர் முஜ்தபா காமேனியுடன் பேசவில்லை. அவரிடம் இருந்து எப்போதாவது அறிக்கை ஒரு வருகிறது. அவர் உயிருடன் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. ஈரான் மீதான அழுத்தம் அதிகரிப்பதால் விரைவில் அந்த நாட்டுடன் விரிவான ஒப்பந்தம் ஏற்படும். அதன் மூலம் உலகம் மேலும் பாதுகாப்பானதாக மாறும். தங்களிடம் அணு ஆயுதம் வைக்கப்போவதில்லை என ஈரான் ஒப்புக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவும், ஈரானும் சேர்ந்து ஹார்மூஸ் நீரிணை பாதுகாப்போம்” என்று அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்குக்கான அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஈரான் தலைவர்களுடன் பேசியதாக கூறிய டிரம்ப், எனினும் யாருடன் விட்காப் பேசினார் என்பதை வெளியிடவில்லை. அவர் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் எங்களின் எச்சரிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பணிந்துவிட்டார் என்று விமர்சனமும் செய்துள்ளது.
டிரம்புடன் நேரடியாகவோ, மத்தியஸ்தர் மூலமோ பேசவில்லை என ஈரான் மறுத்து வரும் நிலையில், ஈரான் சார்பில் யாருடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரானில் இருந்து வரும் இந்த முரண்பட்ட கூற்றுகள், தற்காலிக போர் நிறுத்தம் முடிந்தவுடன் பதற்றம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.