உலக செய்திகள்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்தால் பரபரப்பு: உயிர் தப்பிய ஜனாதிபதி டிரம்ப் - வீடியோ

துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதை அடுத்து, இரவு விருந்திலிருந்து டிரம்ப் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25, 2026 இரவில், வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதனால் உடனடியாக அங்கிருந்து ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

வருடாந்திர ஊடக நிகழ்வுக்கு முன்னதாக, டிரம்பும், மெலானியாவும் அமர்ந்திருந்த ஓட்டல் விருந்தினர் மாளிகைக்கு வெளியே துப்பாக்கிசூடு சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவின் ரகசிய சேவை மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை பாராட்டினார். இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், “துப்பாக்கிசூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் 'நிகழ்ச்சியைத் தொடரலாம்' என்று நான் பரிந்துரைத்துள்ளேன், ஆனால் அது முற்றிலும் பாதுகாப்பு துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படியே நடக்கும். அவர்கள் விரைவில் ஒரு முடிவை எடுப்பார்கள். அந்த முடிவை பொருட்படுத்தாமல், இந்த மாலை பொழுது திட்டமிட்டதை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும், மேலும் நாம் இதை மீண்டும் செய்ய வேண்டியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக துப்பாக்கி சத்தம் கேட்ட பிறகு, "கீழே படுங்கள்!" மற்றும் "கீழேயே இருங்கள்!" என்று மக்கள் கத்த, சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளி காட்சிகளில் டிரம்பும் பங்கேற்பாளர்களும் தங்கள் மேசைக்கு பின்னால் பதுங்கிக்கொண்டதை காண முடிந்தது.

பின்னர், ரகசிய சேவை முகவர்களால் டிரம்ப் சம்பவ இடத்திலிருந்து அவசரமாக அழைத்து செல்லப்பட்டார், அதை தொடர்ந்து கனரக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு போலீசார் மேஜையை சூழ்ந்துகொண்டனர். பின்னர் வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் தலைவரான வெய்ஜியா ஜியாங், நிகழ்ச்சி மீண்டும் தொடங்கும் என்றும், கூடுதல் விவரங்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின்போது உடனடியாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அசோசியேட்டட் பிரஸ் வட்டாரம் தெரிவித்தது. வெள்ளை மாளிகை செய்தியாளர்களின் இரவு விருந்தின்போது நடந்ததாக கூறப்படும் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக, சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.