உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு வருகை தரும்படி ஜின்பிங்கிற்கு டிரம்ப் அழைப்பு

அமெரிக்க மற்றும் சீன மக்களுக்கு இடையேயான உறுதியான உறவுக்கு வலு சேர்க்கும் வகையில் இதனை நான் எதிர்பார்த்து இருக்கிறேன்.

பீஜிங்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சீனாவுக்கு 3 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் சீனாவுக்கு நேற்று சென்றார். அவருடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனர் டிம் குக் ஆகியோரும் சென்றுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும். அவருக்கு ராணுவ அணிவகுப்புடன் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவரை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், டிரம்ப் கூறும்போது, ஈரானுடனான பதற்றம் தணியவும், தூதரக ரீதியிலான உடன்பாடு ஏற்படவும் சீனா உதவ வேண்டும். நாம் இணைந்து சிறப்பான எதிர்காலம் ஒன்றை உருவாக்க போகிறோம் என கூறினார். இதேபோன்று, சீன அதிபர் ஜின்பிங் கூறும்போது, நம் இரு நாட்டு மக்களின் நலனுக்காக நல்ல எதிர்காலம் ஒன்றை நாம் கட்டமைக்க வேண்டும்.

அமெரிக்கா - சீனா ஆகிய நாடுகள் போட்டியாளர்களாக இல்லாமல் நட்பு நாடாக இருக்க வேண்டும் என்றார். இந்த நிலையில், டிரம்ப் இன்று கூறும்போது, இந்த அழகான வரவேற்புக்காக சீன அதிபர் ஜின்பிங்கிற்கு நான் மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வருகிற செப்டம்பர் 24-ந்தேதி அமெரிக்காவுக்கு வரவேண்டும் என ஜின்பிங்கை இன்றிரவு அழைக்க இருக்கிறேன். அது எனக்கான கவுரவம். அதற்காக ஆவலாக காத்திருக்கிறேன். அமெரிக்க மற்றும் சீன மக்களுக்கு இடையேயான உறுதியான உறவுக்கு வலு சேர்க்கும் வகையில் இதனை நான் எதிர்பார்த்து இருக்கிறேன்.

இது ஒரு மிக சிறப்பான உறவு. இதற்காக உங்களுக்கு மீண்டும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது ஆச்சரியமளிக்கும் சந்திப்பாக இருந்தது என்று அவர் கூறினார். டிரம்ப் தெரிவித்தபடி, ஜின்பிங் செப்டம்பரில் வெள்ளை மாளிகைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.