வாஷிங்டன் டி.சி.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.
இந்நிலையில், ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், 21 மணிநேரம் நீடித்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.
அமெரிக்கா, ஈரான் இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த நிலையில், சீனா மத்தியஸ்தம் செய்ய ஈரான் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து உள்ளது. ஆனால், அமெரிக்கா தவறான நம்பிக்கையை ஏற்படுத்தினால், முழு அளவிலான போருக்கும் தயாராக உள்ளோம் என ஈரான் எச்சரித்து இருக்கிறது.
இதேபோன்று, சீனாவுக்கு மேற்கொண்ட பயணம் நிறைவடைந்ததும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சொந்த நாட்டுக்கு புறப்பட்டார். அப்போது விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, ஹார்மூஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் என சீனாவும் ஒப்பு கொண்டுள்ளது என்று அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இரண்டரை வாரங்களாக ஈரானை சுற்றி அமெரிக்க கப்பல்கள் மேற்கொண்டு வரும் முற்றுகை நடவடிக்கையால், ஈரானுக்கு நாளொன்றுக்கு 50 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது என்று நானும் சீன அதிபர் ஜின்பிங்கும் கருத்தொருமித்து உறுதியான முடிவுக்கு வந்துள்ளோம் என்றார்.
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு திரும்பியுள்ள டிரம்ப், தன்னுடைய உதவியாளர்களுடன் இணைந்து ஈரான் தொடர்பாக முக்கிய முடிவை எடுக்க இருக்கிறார். இதில், பேச்சுவார்த்தையை முடித்து விட்டு, வான்வழியாக தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளார் என தி நியூயார்க் டைம்ஸ் தெரிவிக்கின்றது. இதனால், ஈரானுக்கு எதிராக கடுமையான தாக்குதலை தொடுக்க 2.0 என்ற திட்டம் தயாராகி வருகிறது என கூறப்படுகிறது.