உலக செய்திகள்

“கியூபாவை கைப்பற்றி எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்..” - டொனால்டு டிரம்ப் கணிப்பு

கியூபாவை வசப்படுத்தும் கௌரவம் தனக்கு கிடைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

கரீபியன் தீவு நாடான கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகால பகை நிலவுகிறது. இந்த சூழலில், கியூபாவுக்கு வந்து கொண்டிருந்த வெனிசுலா நாட்டு எண்ணெய் வினியோகத்தை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. கியூபாவின் 70 சதவீத மின் உற்பத்தி எரிபொருள் சார்ந்தவை ஆகும். டீசல் மூலம் அனல் மின் நிலையங்கள் இயங்குகின்றன. எரிபொருள் இல்லாமல் அவை முடங்கியதால் நாடு முழுதும் கடும் மின்வெட்டு நிலவுகிறது.

9.6 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கியூபா, அமெரிக்கா விதித்துள்ள எண்ணெய்த் தடையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட நேர மின்வெட்டு, உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் கியூபாவைக கைப்பற்றும் பெருமை அமெரிக்காவுக்கு கிடைக்கும் என டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “கியூபாவை விடுவித்தாலும் சரி அல்லது கைப்பற்றினாலும் சரி, என்னால் அந்த தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். கியூபா ஒரு அழகான தீவு. சிறந்த வானிலை கொண்டது. அதை வசப்படுத்தும் கௌரவம் எனக்குக் கிடைக்கும். கியூபாவை நட்பார்ந்த முறையில் கைப்பற்றுவது பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் தமது நிர்வாகம் பேசி வருகிறது” என்று டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் ஈரானுடனான போர் தணிந்ததும் கியூபா பக்கம் திரும்பவிருப்பதாக டிரம்ப் கூறினார். ஆனால் எவ்வாறு அதனைக் கைப்பற்றவிருக்கிறார் என்பது பற்றிய விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.