வாஷிங்டன்,
ஈரான்-அமெரிக்கா இடையே முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 2-வது கட்ட பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது.
போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் மூலமாக ஈரானுக்கு ஒரு அமைதி திட்டத்தை அமெரிக்கா கொடுத்து அனுப்பியது. அந்த திட்டத்தை ஆய்வு செய்து வருவதாக ஈரான் தெரிவித்தது.
இதற்கிடையே, 3 அமெரிக்க கடற்படை கப்பல்கள், ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்தன. அப்போது நடத்தப்பட்ட ஈரான் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தன. ஈரான் ராணுவ தளங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தின. இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு நிருபருக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்தார். அதில், “அமெரிக்கா-ஈரான் கடற்படைகள் இடையிலான மோதல் ஒரு அன்பான சண்டைதான். போர் நிறுத்தம் இன்னும் நீடிக்கிறது. அமைதி ஒப்பந்தம் எந்த நாளிலும் வரலாம். ஈரான் புரிந்து கொள்ள வேண்டும். அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிடடால், அந் நாடு இன்னும் அதிகமாக வேதனைப்பட வேண்டி இருக்கும்” என்று கூறினார்.
இந்நிலையில் ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், அவர்களிடமிருந்து (ஈரான்) இன்று இரவுக்குள் பதில் வரும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார். ஈரான் வேண்டுமென்றே அமைதி பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதாக நம்புகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், "விரைவில் தெரிந்துவிடும்" என்று கூறினார்.