வடகொரியா தொடர்ந்து அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.
வடகொரியாவின் இந்த செயல்கள் உலகநாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இந்த சோதனைகளை வடகொரியா கைவிட வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.
ஆனால் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருவதால், அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வடகொரியாவுடன் வர்த்தக உறவு கொண்ட சீனா மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப் படுத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனாவின் பெய்ஜிங்குக்குச் சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் வடகொரியாவுடன் அணு ஆயுத சோதனைகளை, திட்டங்களை கைவிடுவது குறித்து நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயற்சிப்பதாகவும், ஆனால் வடகொரியாவோ இந்தப் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் அவரிடம் இருநாட்டு அதிகாரிகள் எந்த மட்டத்திலான பேச்சு வார்த்தையில் ஈடுபடுகின்றனர் என்று கேட்ட போது பதில் அளிக்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.