பீஜிங்,
அமெரிக்கா-ஈரான் மோதல் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துக்கான கடல்வழி பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பு சிக்கல்களை சந்தித்ததால் கச்சா எண்ணெய் விலை உலகளவில் அதிகரித்து, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம், உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற விளைவுகள் உருவாகின. இதன் தாக்கம் ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்து உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியது.
ஈரானுக்கு முக்கிய பொருளாதார ஆதரவாளராக சீனா செயல்பட்டு வருகிறது. சீனா, ஈரானின் எண்ணெயை தொடர்ந்து வாங்கி வருவதுடன், அமெரிக்க தடைகளை சமாளிக்க வர்த்தக மற்றும் நிதி ஆதரவுகளையும் வழங்கி வருகிறது. அதே நேரத்தில் நேரடி ராணுவ தலையீட்டை தவிர்த்து, தூதரக மற்றும் பொருளாதார ஆதரவு மூலம் ஈரானை ஆதரிக்கும் நிலைப்பாட்டை சீனா கடைப்பிடிக்கிறது.
இத்தகைய சூழல்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 3 நாள் பயணமாக நேற்று சீனா சென்றார். அமெரிக்கா ஜனாதிபதி ஒருவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும். கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இருந்தபோது சீனாவுக்கு நேரில் சென்றநிலையில் 2-வது முறையாக கடந்தாண்டு பதவியேற்றதை தொடர்ந்து சீனாவுக்கு சென்றார்.
வாஷிங்டனில் இருந்து அவர் ஏர்போர்ஸ் ஓன் விமானம் மூலமாக சீனாவுக்கு புறப்பட்டார். அவருடன் உள்துறை மந்திரி மார்க் ரூபியோ, ராணுவ மந்திரி பீட்டர் ஹெக்சேத், தொழிலதிபர் எலான் மஸ்க், ஆப்பிள் தலைமை அதிகாரி டிம் குக், போயிங் விமான நிறுவன தலைமை அதிகாரி கெல்லி ஓர்ட்பெர்க், நிவீடியா சிப் நிறுவன அதிகாரி ஜென்சன் ஹூவாங் உள்ளிட்டவர்கள் சீனாவுக்கு சென்றனர். டிரம்புக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3 நாள் பயணமாக சீனா சென்றுள்ள டிரம்புக்கு இன்று (வியாழக்கிழமை) சீன அரசின் அதிகாரப்பூர்வ வரவேற்று அளிக்கப்படுகிறது. அதன்பின் சீன அதிபர் ஜின்பிங்குடன் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் ஈரான் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள். மேலும் போயிங் நிறுவனம்-சீனா இடையே 500 விமானங்கள் வாங்குவதற்காக ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. பின்னர் ஜின்பிங் அளிக்கும் அரசு விருந்தில் பங்கேற்கிறார்.
நாளை (வெள்ளிக்கிழமை) இருதலைவர்கள் இடையே தேநீர் சந்திப்பு மற்றும் மதிய உணவுடன் கூடிய ஆலோசனை நடைபெறுகிறது. சீனாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக நிருபர்களிடம் கூறும்போது, ஈரான் போர் குறித்து ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். ஹார்முஸ் நீரிணை எங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் யார் உதவியும் தேவையில்லை. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்திருந்தார்.