வாஷிங்டன்,
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், 100 பவுண்டு (சுமார் 45 கிலோ) எடையுள்ள ராட்சத ஆமை ஒன்று தனது வீட்டில் இருந்து தப்பித்து ஓட முயன்ற விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் டென்வர் நகரின் தெற்கே உள்ள லிட்டில்டன் நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 'லார்ட்' என்ற பெயருடைய ஆப்பிரிக்க சுல்காடா வகை ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். இந்த ராட்சத ஆமை 100 பவுண்டு (சுமார் 45 கிலோ) எடை கொண்டது. வீட்டில் இருக்க பிடிக்காத இந்த ஆமை கடந்த மாதம் 31-ந்தேதி அன்று தனது வீட்டின் வேலி இடுக்கின் வழியாக வெளியேறியது.
தப்பித்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் அதற்கு இருந்தபோதிலும், அதன் அசைவுகளில் எந்தவித அவசரமும் இல்லை. உலகின் மிக மெதுவான வேகத்தில் அது சாலையைக் கடக்க முயன்றது. அது வீட்டை விட்டு வெளியேறி, சாலையின் நடுவே மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த போது பொதுமக்களால் பார்க்கப்பட்டது. உடனே அவர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெபர்சன் கவுண்டி போலீசார், அலுவலக விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரி மெக்முல்லன், ஆமையை மீட்கும் பணியில் ஈடுபட்டார். ஆமையின் உரிமையாளரும் அங்கு விரைந்தார். ஆமையை மீண்டும் வீட்டிற்குள் செல்லுமாறு அவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அந்த ஆமை பிடிவாதமாக அவரது பேச்சைக் கேட்காமல் எதிர் திசையிலேயே நகர முயன்றதாக அதிகாரிகள் நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளனர்.
ஆமையின் அசாத்திய எடையின் காரணமாக அதை ஒருவரால் மட்டும் நகர்த்த முடியவில்லை. இறுதியில், அங்கு வந்த சில பொதுமக்களின் உதவியுடன், அதிகாரிகள் அந்த 45 கிலோ ஆமையைத் தூக்கிக் கொண்டு சென்று அதன் வீட்டுத் தோட்டத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.
இந்த சுவாரசியமான தப்பித்தல் முயற்சியின் 'பாடிகேம்' வீடியோ காட்சிகளை போலீசார் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். "மிக மெதுவான இந்த தப்பித்தல் முயற்சியை எங்கள் அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துவிட்டனர்" என போலீசார் குறிப்பிட்ட வீடியோ, நெட்டிசன்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.