காத்மாண்டு,
நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரப் பகுதியில் இன்று காலை 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
'பிஷ்டெயில் ஏர்' மற்றும் 'ஏர் டைனஸ்டி' ஆகிய 2 தனியார் நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நேபாளம் நாட்டின் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் செல்லும் பாதையில், சுமார் 14,340 அடி உயரத்தில் வானில் பறந்து சென்று கொண்டிருந்தன. இதையடுத்து சோலுகும்பே மாவட்டத்தில் உள்ள பெரிச்சே ஹெலிபேடில், 2 ஹெலிகாப்டர்களும் சுமார் காலை 9:20 மணியளவில் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்றன. அப்போது, அவற்றின் இறக்கைகள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டன. இதனால் 2 ஹெலிகாப்டர்களும் பலத்த சத்தத்துடன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பிஷ்டெயில் ஹெலிகாப்டரில் பயணித்த சென்னையைச் சேர்ந்த வசந்த் குமார் பாலராமராமுடு (வயது 47) என்ற இந்தியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நியூசிலாந்து குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சைலேஷ் கிருஷ்ணா படேல் (வயது 49) என்பவர் படுகாயமடைந்தார். விபத்தில் சிக்கிய 2 ஹெலிகாப்டர்களின் விமானிகளும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனே சென்ற உள்ளூர் மீட்புக்குழுவினர் விரைந்து செயல்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டனர். படுகாயமடைந்த சைலேஷ் கிருஷ்ணா மற்றும் 2 விமானிகளும் அவசர சிகிச்சைக்காக காத்மாண்டுவில் உள்ள மெடிசிட்டி ஆஸ்பத்திரிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.