இஸ்லாமாபாத்,
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லையில் நீண்ட காலமாகவே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தின் டர்ன் தாரன் மாவட்ட சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று மதியம் சந்தேகத்திற்குரிய வகையில் மூன்று பேர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர். எல்லைப் பாதுகாப்புப்படையினர் பலமுறை எச்சரித்தும், அவர்கள் அதை மீறி முன்னேறியதால் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பாகிஸ்தான் அரசு தற்போது கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்திய ஊடுருவல்காரர்கள் என்று இந்தியத் தரப்பு கூறும் நிலையில், அவர்கள் தவறுதலாக எல்லையைத் தாண்டிய அப்பாவிப் பொதுமக்கள் என்று பாகிஸ்தான் வாதிடுகிறது. இது தொடர்பாக இஸ்லாமாபாத் தில் உள்ள இந்தியத் தூதரை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்துச் சம்மன் அனுப்பி, தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.