கோப்பு படம் 
உலக செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தி அருகே 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்

ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருவது சர்வதேச கப்பல் போக்குவரத்திலும், கச்சா எண்ணெய் விநியோகத்திலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஓமன் அருகே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு வெளியிட்ட தகவலில், ஓமனின் கசாப் துறைமுகம் அருகே சென்றுகொண்டிருந்த 2 எண்ணெய் கப்பல்கள் மீது அடையாளம் தெரியாத பொருட்கள் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கப்பலின் பின்பகுதியிலும், மற்றொரு கப்பலின் என்ஜின் அறையிலும் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கண்ணிவெடியில் சிக்கியதாக ஈரான் தகவல்

இதற்கிடையே, ஈரானின் புரட்சிகர காவல் படையின் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்குப் பகுதியில் அனுமதியற்ற வழியாகச் செல்ல முயன்ற 2 எண்ணெய் கப்பல்கள் கடற்படை கண்ணிவெடிகளில் சிக்கி தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கப்பல்கள் தங்களது அடையாளம் மற்றும் வழிகாட்டும் கருவிகளை அணைத்துவிட்டு ரகசியமாகச் செல்ல முயன்றதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

எனினும், ஈரான் கூறியுள்ள கண்ணிவெடி தாக்குதல் குறித்த தகவல்களை உறுதிப்படுத்தப்படவில்லை. உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருவது சர்வதேச கப்பல் போக்குவரத்திலும், கச்சா எண்ணெய் விநியோகத்திலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT