தைப்பே
தைவானை புரட்டிப்போட்ட சாம்பி புயலுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். 500 பேர் காயம் அடைந்தனர்.
பசிபிக் கடலில் சாம்பி என்ற பெயரிடப்பட்ட புயல் உருவானது. இது சக்தி வாய்ந்த புயலாக உருவாகி தைவான் நாட்டை புரட்டிப்போட்டுள்ளது. இதனால், மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என கணிக்கப்பட்டது. அதனுடன், கனமழை கொட்டி தீர்த்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவான் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயலை முன்னிட்டு, தைவானில் 260-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள், 660-க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் என ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால், பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரித்த அதிகாரிகள் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 56 ஆயிரம் பேரின் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். வடகிழக்கில் இருந்து வடக்கு நோக்கி புயல் இன்று நகர்கிறது. இதனால், வடக்கு மற்றும் மத்திய தைவானில் பல கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
சாம்பி புயல் சீனா மற்றும் ஜப்பானை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தைவானில், நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று அதில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. 259 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த புயலால், இன்று மழைப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.