உலக செய்திகள்

கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் கூட்டமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தியது.

துபாய்,

1960ம் ஆண்டு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக் - OPEC) உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் அல்ஜீரியா, காங்கோ, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசுலா, காபோன், எக்குவட்டோரியல் கினி, ரஷியா, மெக்சிகோ, கஜகஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் தேவைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் உற்பத்தியை இந்த அமைப்பு நிர்ணயித்து வருகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலையையும் இந்த அமைப்பே நிர்ணயம் செய்து வருகிறது. இந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் சவுதி அரேபியா உள்ளது.

இதனிடையே, கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், சவுதி உள்பட பல்வேறு அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

அதேவேளை, ஈரானின் தொடர் தாக்குதலின்போது கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை, ஈரானுக்கு எதிராக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் தனது விரக்தியை வெளிப்படுத்தியது.

இந்நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. வரும் 1ம் தேதி முதல் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகள் அந்த அமைப்பு கூறும் அளவிலேயே தினமும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும். சர்வதேச சந்தையில் தேவை அதிகரிக்கும்போதும் சவுதி தலைமையிலான கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு கூறும் அளவிலேயே அனைத்து நாடுகளும் தினமும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்கள் சந்தையை விரிவுபடுத்த முடியாத மற்றும் சுயமாக விலையை நிர்ணயிக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரகம் அந்த கூட்டமைப்பில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலையை சுயமாக நிர்ணயம் செய்யவும் ஐக்கிய அரபு அமீரகம் முடிவெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்த ஐக்கிய அரபு அமீரகம் அந்த அமைப்பிற்கு தினமும் சராசரியாக 10 முதல் 12 சதவீத கச்சா எண்ணெய் பங்களிப்பை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.