உலக செய்திகள்

மல்லையாவின் வார செலவுக்கான தொகையை மும்மடங்கு அதிகரித்து வழங்க லண்டன் கோர்ட் அனுமதி

மல்லையாவின் வார செலவுக்கான தொகையை மும்மடங்கு அதிகரித்து வழங்க லண்டன் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. #VijayMallya

லண்டன்,

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்டார்.இது தொடர்பாக அவரை நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் முறையீட்டின்மீது லண்டன் கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே பெங்களூ ருவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் 13 வங்கிகளின் கூட்டமைப்பு வழக்கு தொடுத்தது. அதை விசாரித்த தீர்ப்பாயம், விஜய் மல்லையாவிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 203 கோடியை 12 சதவீத வட்டியுடன் சேர்த்து (ரூ.9 ஆயிரத்து 853 கோடி) வசூலித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது. இதை இங்கிலாந்து கோர்ட்டு உறுதி செய்தது. மல்லையாவின் ரூ.10,210 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

எனவே, பிரிட்டன் அரசு விதிகளின் அவரது வாழ்க்கைச் செலவுக்காக நீதிமன்றம் நிதி ஒதுக்குவது வழக்கம். அதன்படி மல்லையாவின் ஒருவாரச் செலவுக்கு ரூ.4.5 லட்சம் முதலில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தனது வாழ்க்கைச் செலவுக்குக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மல்லையா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் அவரது ஒரு வார வாழ்க்கைச் செலவை சுமார் 3 மடங்கு உயர்த்தி ரூ.16 லட்சமாக அறிவித்துள்ளது.