உலக செய்திகள்

இங்கிலாந்தில் இந்திய அமெரிக்கர் கடத்தி கொலை; 6வது நபர் கைது

இங்கிலாந்தில் இந்திய அமெரிக்கர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6வது நபரை அந்நாட்டு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #UKpolice

லண்டன்,

இங்கிலாந்தில் லெய்செஸ்டர் பகுதியில் கடந்த வாரம் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவர் 74 வயது நிறைந்த ராம்நிக்லால் ஜோகியா என்ற நகை கடை ஊழியரான இந்திய அமெரிக்கர் என அடையாளம் காணப்பட்டார்.

தொடர் விசாரணையில், பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த அவரை பெல்கிரேவ் சாலையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தங்களது வாகனத்தின் உள்ளே வலுக்கட்டாயப்படுத்தி தள்ளி, கடத்தி சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அவரது உடல் லெய்செஸ்டர் நகரில் ஸ்டாட்டன் பகுதியில் கால்பை தெருவில் இருந்து போலீசார் கண்டெடுத்து உள்ளனர். அவர் கடத்தி கொலை செய்யப்பட்டார் என தெரிய வந்தது.

இந்த வழக்கில் லெய்செஸ்டர் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 22 வயது நிறைந்த 2 பேர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீஸ் காவலில் உள்ளனர். அதனை தொடர்ந்து 19, 20 மற்றும் 23 வயது நிறைந்த லெய்செஸ்டர் பகுதியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஜோகியா கொலை வழக்கில் 20 வயது நிறைந்த மற்றொரு நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் ஈடுபட்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை போலீசார் காவலில் எடுத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.

#UKpolice #arrest