கீவ்,
உக்ரைன் நாடு மீது ரஷியா தொடுத்து வரும் போரானது, நடப்பு ஆண்டு பிப்ரவரியுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்யும் சூழலில் உள்ளது. போரால் உக்ரைனில், வீரர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. இது ஒருபுறம் நடந்தபோதும், ரஷியாவும், உக்ரைனும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து 1,400 கி.மீ. தொலைவில் உள்ள ரஷியாவின் உத்மூர்த் பகுதியில் அமைந்த ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலையை டிரோன்கள் கொண்டு உக்ரைன் படை தாக்கியுள்ளது.
இதுபற்றி உத்மூர்த் குடியரசு பகுதிக்கான தலைவர் அலெக்சாண்டர் பிரெசலாவ் கூறும்போது, ரஷியாவின் தளங்கள் ஒன்றின் மீது உக்ரைன் ஏவிய டிரோன்கள் தாக்கியுள்ளன என உறுதிப்படுத்தினார்.
இதன்படி, இஸ்காண்டர் வகை பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து செல்ல கூடிய பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் உற்பத்தி செய்ய கூடிய ஆலை மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.
இதேபோன்று உக்ரைன் ராணுவமும், ரஷிய அரசின் இயந்திர உற்பத்தி ஆலையை இலக்காக கொண்டு உக்ரைன் தாக்கியுள்ளது. இதற்காக உக்ரைனின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிளமிங்கோ ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன என தெரிவித்து உள்ளது.
இந்த தாக்குதல்களால் வோட்கின்ஸ்க் பகுதியில் இருந்த பல்வேறு கட்டிடங்களும் சேதம் அடைந்தன. அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியிருந்தது. இதேபோன்று சமரா பகுதியில் உள்ள கியாஸ் உற்பத்தி ஆலை மீதும் தாக்குதல் நடத்தினோம் என மற்றொரு அறிக்கையில் உக்ரைன் ராணுவம் தெரிவித்து உள்ளது.