உலக செய்திகள்

ரஷியாவை இணைக்கும் கிரிமியா பாலம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்

ரஷியாவின் பல்வேறு பகுதிகளின் மீது 1,300-க்கும் மேற்பட்ட உக்ரைனின் டிரோன்கள் தாக்க வந்தன. அவற்றை மறித்து அழித்து விட்டோம் என்று தெரிவித்தது.

கீவ்

ரஷியாவை இணைக்கும் கிரிமியா பாலம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.

உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின.

ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது. போரால் வீரர்கள் உள்பட இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர்.

டிரம்ப் பேச்சுவார்த்தை

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடந்தது. இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன், டிரம்ப் பேசினார். எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை.

இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போரானது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த போரின் ஒரு பகுதியாக, ரஷியாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா பாலம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை உக்ரைனின் ஒரு பகுதியாக கிரிமியா இருந்தது.

உக்ரைனின் டிரோன்கள்

எனினும், அதனை தன்னுடன் இணைத்த ரஷியா, பின்னர் ரெயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கான வசதிகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில், 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியதும் பல முறை பாலத்தின் மீது பதிலடியாக உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டது. பின்னர் சேதம் சரி செய்யப்பட்டு, பாலம் செயல்பட்டு வந்தது.

இந்த சூழலில், பாலம் அமைந்த கருங்கடல் பகுதி மீது நேற்றிரவு உக்ரைன் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இதுபற்றி ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ரஷியாவின் பல்வேறு பகுதிகளின் மீது 1,300-க்கும் மேற்பட்ட உக்ரைனின் டிரோன்கள் தாக்க வந்தன. அவற்றை மறித்து அழித்து விட்டோம் என்று தெரிவித்தது.

இதனை, ரஷிய பாதுகாப்பு அமைச்சக உயரதிகாரியான செர்ஜி அக்சியோனவ் தன்னுடைய டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். எனினும், இதனால் யாருக்கும் ஏற்பட்ட பாதிப்பு அல்லது உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

SCROLL FOR NEXT