உலக செய்திகள்

உக்ரைன் போர் விவகாரம்: ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு

ரஷிய அதிபர் புதினுடனான தொலைபேசி உரையாடலின்போது உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவுவதற்கான அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.

வாஷிங்டன்

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. ரஷியாவும், உக்ரைனும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இரு தலைவர்களும் 90 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். இதில் உக்ரைன் போர், ஈரான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.இதுதொடர்பாக ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை உதவியாளர் யூரி உஷாகோவ் கூறியதாவது:-

ரஷிய அதிபர் புதினுடனான தொலைபேசி உரையாடலின்போது உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவுவதற்கான அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார். சண்டையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வரவும், நெருக்கடியைச் சமாளிப்பதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் பாடுபட தயாராக இருப்பதாக கூறினார்.போர்க்களத்தில் ரஷியப் படைகள் சீரான முன்னேற்றங்களைச் செய்து வருவதாக டிரம்பிடம் புதின் கூறினார். போர்க்களத்தின் உண்மையான நிலையை புதின் விவரித்தார். இவ்வாறு அவர் கூறினார்.மேலும் மோதலை நீட்டிப்பதிலும், தீவிரப்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதத்திலும் கீவ்வும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளன என்று உஷாகோவ் குற்றம் சாட்டினார்

இந்த உரையாடலின்போது, அமெரிக்கத் தூதர்களான ஸ்டீவ் விட்காப், ஜாரெட் குஷ்னர் ஒரு தீர்வை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிப்பார்கள் என்றும், அவர்கள் ரஷியாவிற்கு மற்றொரு பயணம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் புதினிடம் டிரம்ப் தெரிவித்தார்.இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனும் தொலைபேசியில் டிரம்ப் பேசினார். அடுத்த வாரம் துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்க உள்ள நிலையில் அவர் புதின்-ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவில் 250-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி வாஷிங்டனில் உள்ள நேசனல் மாலில் அதிபர் டிரம்ப் உரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கிடையே புயல் அச்சுறுத்தல் காரணமாக அங்கு திரண்டிருந்த மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் நேசனல் மாலில் நிச்சயம் உரையாற்றுவேன் என்று டிரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, சிறிது மழைக்காக நமது 250-வது ஆண்டு கொண்டாட்டத்தை நான் தடுத்து நிறுத்த விட மாட்டேன். என்ன நடந்தாலும் நான் அங்கு இருப்பேன். தேவைப்பட்டால் வானிலை சீராகும் வரை நிகழ்ச்சி தாமதப்படுத்தப்படும் என்றார்.