உலக செய்திகள்

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் இடையே தீவிரமடையும் மோதல்: பதற்றத்தை தணிக்குமாறு ஐ.நா. வலியுறுத்தல்

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டி உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டி உள்ளது. கடந்த மாத இறுதியில் தொடங்கிய மோதலின் தீவிரமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் எல்லை தாண்டிய மோதல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் நடைபெற்று வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு தலீபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. தங்களது தாக்குதல்கள் காபூல் மற்றும் நங்கர்ஹார் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகளை மட்டுமே இலக்கு வைத்ததாக கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாகக் கூறி, இந்தத் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் இந்த சம்பவத்தை நியாயப்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இரு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் ஆசிய பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனிடையே மறுவாழ்வு மருத்துவமனை கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் தொடர்பாக , ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த புதிய செய்திகளால் மிகுந்த வருத்தம் அடைகிறேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள். சம்பந்தப்பட்ட தரப்பினர் பதற்றத்தைத் தணித்து, மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்து, பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொதுச் சொத்துக்களின் பாதுகாப்பு உட்பட சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.