உலக செய்திகள்

தென்கொரியா சென்றடைந்த மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு உற்சாக வரவேற்பு

தென்கொரிய பாதுகாப்பு மந்திரி ஆன் கியூ-பேக்கை சந்தித்து மண்டல ஸ்திரத்தன்மை மற்றும் பகிரப்பட்ட பாதுகாப்பு சவால்கள் தொடர்பான பார்வைகளை பரிமாறி கொள்ள இருக்கிறார்.

சியோல்

மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு 2 நாடுகளில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இவருடைய பயணம், மண்டல பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது முதல் பாதுகாப்பை நவீனப்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களை கொண்டது.

இதற்காக வியட்நாம் நாட்டுக்கு அவர் நேற்று சென்றார். அப்போது வியட்நாமுடன் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பாதுகாப்பு தொழில் கூட்டாண்மையை வலுப்படுத்துவது மற்றும் கடல்சார் ஒருங்கிணைப்பை ஊக்கப்படுத்துவது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்கப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தென்கொரியாவுக்கு சென்றடைந்துள்ளார். அவரை தென்கொரியாவுக்கான இந்திய தூதர் கவுரங்காலால் தாஸ் வரவேற்றார். அப்போது அவருடன் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர். இன்றும் நாளையும் தென்கொரியாவில் பல உயர்மட்ட கூட்டங்களில் அவர் பங்கேற்க உள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் கிழக்கு கொள்கை திட்டம் மற்றும் தென்கொரியாவின் இந்தோ-பசிபிக் செயல் திட்டம் ஆகியவற்றிற்கு இடையே வளர்ந்து வரும் ஒற்றுமையால், இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியாவின் தடம் அதிகரித்து இருப்பது சுட்டி காட்டப்பட்டு உள்ளது.

இந்த பயணத்தில், நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை, சிங் மறுஆய்வு செய்வதுடன், செயல்திட்ட நடைமுறைகளை இன்னும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்கிறார். இதேபோன்று, தென்கொரிய பாதுகாப்பு மந்திரி ஆன் கியூ-பேக்கை சந்தித்து மண்டல ஸ்திரத்தன்மை மற்றும் பகிரப்பட்ட பாதுகாப்பு சவால்கள் தொடர்பான பார்வைகளை பரிமாறி கொள்ள இருக்கிறார்.