புதுடெல்லி,
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக ஜெர்மனி செல்ல உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் செவ்வாய்க்கிழமை ராஜ்நாத் சிங் பெர்லின் புறப்பட்டு செல்ல உள்ளார் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின்போது ஜெர்மனி நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ் மற்றும் பிற மூத்த தலைவர்களை ராஜ்நாத் சிங் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது இந்தியா-ஜெர்மனி இடையே பல்வேறு ராணுவ தளவாடங்களின் மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்தியை தொடங்குவதற்கான செயல்திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.நா. ஒப்பந்தத்தின்படி, அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான பயிற்சி மற்றும் பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பு செயல்திட்டமும், அதனை செயல்படுத்துவதற்கான ஏற்பாடும் இருநாட்டு பாதுகாப்பு மந்திரிகளின் முன்னிலையில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்திய கடற்படைக்கு 6 நீர்மூழ்கி கப்பல்களை வழங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.