விக்டோரியா
பிரதமர் மோடி வழிபட்ட செஷல்ஸ் நாட்டின் ஒரே இந்து கோவிலான நவசக்தி விநாயகர் ஆலயத்தின் தனிச்சிறப்புகளை அறிந்து கொள்வோம்.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ். அந்நாட்டின் 50-ம் ஆண்டு தேசிய தினம் 29-ந்தேதி (நேற்று) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க அழைப்பு விடப்பட்டது.
இதனையேற்று பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக செஷல்ஸ் நாட்டிற்கு சென்றார். அவரை அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி நேரில் சென்று வரவேற்றார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய பெருங்கடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், அப்பகுதியில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என குறிப்பிட்டார். செஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தலைமைத்துவம் ஆகியவற்றை பாராட்டி, பிரதமர் மோடிக்கு 'கார்டியன் ஆப் தி ப்ளூ ஹாரிசான்' என்ற செஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்தித்த பிரதமர் மோடி, அவர்களோடு கலந்துரையாடி, புகைப்படமும் எடுத்து கொண்டார்.
இதன்பின்னர் பிரதமர் மோடி, செஷல்ஸ் நாட்டில் மாஹே தீவில் விக்டோரியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள நவசக்தி விநாயகர் கோவிலில் வழிபட்டார். இந்த கோவில், அந்த நாட்டில் அமைந்துள்ள ஒரே இந்து ஆலயம் என்ற தனிச்சிறப்பை பெற்றுள்ளது. இந்த சிறிய தீவு நாட்டின் கலாசார கட்டமைப்பில் இந்திய சமூகத்தின் இருப்பு, நம்பிக்கை மற்றும் பங்கு ஆகியவற்றின் மிகத்தெளிவான மற்றும் நிலையான அடையாளமாக இந்த கோவில் திகழ்கிறது.
1770-க்கு இடைப்பட்ட காலத்தில் 5 இந்தியர்கள், பிரெஞ்சு, ஆப்பிரிக்க குடியேறிகள் இந்நாட்டுக்கு வந்தனர். குடிபெயர்வு காரணமாக இந்தத்தீவு நாடு பன்முகத்தன்மை கொண்டதாக திகழ்கிறது. இந்த கோவில் அந்நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தைச்சேர்ந்த செஷல்ஸ் இந்து கோவில் சங்கம் சார்பில் 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்து மதக்கடவுள்களின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டு, கலைநயமிக்க மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கோபுரத்தை கொண்டுள்ளது.
இந்த கோவில் சிறந்த திராவிட கட்டிடக்கலை பாணியால் தனித்து விளங்குகிறது. இக்கோவில் கலாசார நடவடிக்கைகளின் மையமாக திகழ்கிறது. குறிப்பாக சங்காபிஷேகம், விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி போன்ற இந்து பண்டிகைகள் மிகுந்த உற்சாகத்துடனும் வண்ணமயமான சடங்குகளுடனும் இங்கு கொண்டாடப்படுகின்றன.
பிரதமர் மோடி இந்த கோவிலில் வழிபாடு நடத்திய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, நவசக்தி விநாயகர் ஆலயத்தின் பகவான் ஸ்ரீ கணேசர் அனைவருக்கும் ஞானம், வலிமை மற்றும் வளத்தை அருளட்டும் என்று பதிவிட்டுள்ளார்.