உலக செய்திகள்

கரீபியன் கடலில் போதை பொருள் கடத்தல் படகை தாக்கி, தகர்த்த அமெரிக்கா; 3 பேர் பலி

கரீபியன் கடலில், போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தும் நீர்வழிகளில் படகு பயணித்து உள்ளது.

வாஷிங்டன் டி.சி.

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, போதை பொருள் கடத்தலை ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன்படி, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்.

இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கடந்த மாத தொடக்கத்தில், கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

இது ஒருபுறம் இருக்க பசிபிக் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடல் பகுதியில் போதை பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையையும் டிரம்ப் அரசு எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அமெரிக்க பாதுகாப்பு படை கரீபியன் கடலில் சென்ற படகின் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அந்த படகை தாக்கி, அழித்துள்ளது. அதில் உள்ள போதை பொருட்களும் அழிக்கப்பட்டன என அமெரிக்க பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பான வீடியோ ஒன்றில் சிறிய படகு ஒன்று வெடிக்க செய்து தகர்க்கப்படுகிறது. இதன்பின்னர் தீப்பற்றி எரிகிறது. இந்த படகு கரீபியன் கடலில், போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தும் நீர்வழிகளில் பயணித்து உள்ளது. போதை பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு உள்ளது என பாதுகாப்பு படை தெரிவித்தது

இதுவரை தென்அமெரிக்க கடல் பகுதிகளில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகுகள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான 35-க்கும் மேற்பட்ட படகுகள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன. கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கைகளால் 120 பேர் வரை பலியாகி உள்ளனர். அவற்றில் பல தாக்குதல்கள் கரீபியன் கடலில் நடந்துள்ளன.