காரகாஸ்
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் லட்சக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வெனிசுலாவில் அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை உலுக்கி போட்டுள்ளன. இதில் முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவிலான நிலநடுக்கமும், பின்னர் 7.5 அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டன. முதலில் மொரோன் நகரில் இருந்து மேற்கு பகுதியிலும், காரகாஸ் நகரில் இருந்து 168 கி.மீ. தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
2-வது நிலநடுக்கம் மொரோன் நகரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், தலைநகர் காரகாஸ் நகரில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதில், பல்வேறு பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் குலுங்கின. ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்தது.
இதனால் பல இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன. பொதுமக்கள், தங்களுடைய செல்ல பிராணிகளை தூக்கிக்கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். இதனால் பரபரப்பாக இயங்கி வந்த உணவு விடுதிகள் மற்றும் பிற வர்த்தக கடைகளில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். சாலை முழுவதும் புழுதி பறந்தது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பலர் காயமடைந்தனர். இதனால், அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அந்நாட்டு உள்துறை மந்திரி கேபெல்லோ கூறும்போது, பல்வேறு மாகாணங்களிலும் நிலநடுக்கங்களின் தாக்கம் உணரப்பட்டன. மக்களில் பலர் காயமடைந்து உள்ளனர் என கூறினார்.
வெனிசுலா பொறுப்பு ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, நிலநடுக்க தாக்கங்களின் பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார். எனினும், நிலநடுக்கம் ஏற்பட்டு 3 மணிநேரம் வரை அவர் மக்களிடம் உரையாற்ற தவறி விட்டார் என்றும், காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை அவருடைய அரசு வெளியிடவில்லை என்றும் அரசியல்வாதிகள் மற்றும் நாட்டு மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த இரு நிலநடுக்கங்களும் முறையே 22 கி.மீ. மற்றும் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தன. இதுபோன்று பூமியின் மேற்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால், அவற்றின் தாக்கம் அதிக அளவில் பரவி இருக்கும்.
இதனால், 1,000 முதல் 10,000 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்றும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றது. லட்சக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.