ஈரான் - அமெரிக்கா இடையே இன்று பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவினரும், நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான ஈரான் குழுவினரும் இஸ்லாமாபாத் வந்தனர். இரு தரப்பினரையும் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர், நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக், ராணுவத் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் வரவேற்றனர்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவை அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அமெரிக்காவை ஏமாற்ற ஈரான் செய்யும் எந்த ஒரு முயற்சிக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். முன்னதாக, அமெரிக்கா ஈரானுக்கு 15 அம்ச திட்டத்தை நிபந்தனையாக முன்வைத்தது. பதிலுக்கு ஈரானும் 10 அம்ச திட்டத்தை அமெரிக்காவுக்கு நிபந்தனையாக முன்வைத்தது. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானிய சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த ஒப்புதல் காரணமாக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.மேற்காசியாவில் நிலவும் பதற்றங்களுக்கு இன்றுடன் முடிவு கட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.