வாஷிங்டன்,
அணுசக்தி ஒப்பந்தம் மூலம் சவுதி அரேபியாவுக்கு யுரேனியம் செறிவூட்டலுக்கான அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக சவுதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் நிறுவனம் அமைக்கப்படும்.
சர்வதேச அணுசக்தி முகமையானது, தனது உறுப்பு நாடுகளை சிவில் திட்டங்களுக்கு அணுசக்தியை பயன்படுத்த அனுமதிக்கிறது. அதேநேரம் அணு ஆயுதம் தயாரிக்கப்படாததை உறுதி செய்யும் நோக்கில் அந்த நாடுகளில் ஆய்வும் மேற்கொள்கிறது.
இந்த முகமையின் உறுப்பு நாடான சவுதி அரேபியா தனது மின்சாரம் தயாரிப்பு உள்ளிட்ட சிவில் தேவைகளுக்கு அணுசக்தியை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் காலத்தில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் காலத்திலும் நீடித்தது. கடந்த ஆண்டும் அமெரிக்க எரிசக்தி மந்திரி சவுதி அரேபியா சென்று இது தொடர்பாக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அணுசக்தி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார். இது தொடர்பான முறைப்படி அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
இதன் மூலம் சவுதி அரேபியா யுரேனியம் செறிவூட்டலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக சவுதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் நிறுவனம் அமைக்கப்படும். 30 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் இந்த ஒப்பந்தம், அமெரிக்க நிறுவனங்கள் சவுதி அரேபியாவில் அணுசக்தி திட்டங்களில் ஈடுபட வழிவகுக்கிறது.
சவுதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இருந்தாலும், இது அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அப்போது உறுப்பினர்களின் பெரும் எதிர்ப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சவுதி அரேபியாவுக்கு தங்களது சொந்த யுரேனியத்தை செறிவூட்ட வேண்டும் என்ற நீண்டகால விருப்பத்தை நிறைவேற்ற உதவுவது, அணு ஆயுதப் பெருக்கம் மற்றும் ஆயுதப்போட்டியின் தீவிரத்துக்கு வழிவகுக்கும் என அமெரிக்க எம்.பி.க்கள் அஞ்சுவதால் இந்த ஒப்பந்தம் பெரும் எதிர்ப்பை சந்திக்கும் என கூறப்படுகிறது.
அதேநேரம் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானில் அமெரிக்கா போர் தொடுத்துள்ள இந்த நிலையில் சவுதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை உறுதி செய்திருப்பது, வளைகுடாவில் மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.