புதுடெல்லி,
அமெரிக்கா-ஈரான் மீண்டும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த ஜூன் 8-ந் தேதி ஓமன் அருகே எம்.டி. மாரிவெக்ஸ் என்ற மற்றொரு கப்பல் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியது. தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனர்.இதற்கிடையே நேற்று ஓமனில் உள்ள சோஹார் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில், பலாவ் நாட்டு கொடியுடன் சென்ற பசெட்ட பெல்லோ என்ற வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் முற்றுகையை கடந்து வந்த அக்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பலின் என்ஜின் அறையில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த கப்பலில் ரசாயனம் மற்றும் எண்ணெய் பொருட்களுடன் 24 இந்திய மாலுமிகள் இருந்தனர்.கப்பலில் தீப்பிடித்து எரிவது குறித்து ஓமன் கடற்படைக்கு அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ஓமன் கடற்படையினர் விரைந்து வந்து 21 மாலுமிகளை மீட்டனர். 3 பேர் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி நடந்தது.இந்த நிலையில் செட்ட பெல்லோ கப்பல் மீதான தாக்குதலில் மாயமான 3 இந்திய மாலுமிகளும் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
பலாவ் நாட்டு கொடியுடன் கூடிய எம்.டி. செட்டபெல்லோ கப்பலில் நிகழ்ந்த துயர சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஆரம்பத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 3 இந்திய மாலுமிகளும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இது நமது கடல்சார் குடும்பத்திற்கு ஒரு பெரும் இழப்பாகும். இந்த இக்கட்டான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி அரசு உறுதுணையாக நிற்கிறது. அவர்களின் உறவினர்களுக்கு முழு ஆதரவையும் அளிக்க உறுதிபூண்டுள்ளது. மீட்கப்பட்ட மாலுமிகளின் உடல்களை உடனடியாக தாயகம் கொண்டு வருவதையும், உயிரிழந்தவர்களின் உடல்களை இறுதிச் சடங்குகளுக்காக விரைவாகத் திருப்பி அனுப்புவதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையே பார்வர்ட் சீமென்ஸ் (மாலுமிகள்) யூனியன் இந்தியா பொதுச் செயலாளர் மனோஜ் யாதவ் கூறும்போது, எண்ணெய் கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த 3 மாலுமிகள் ஆந்திரா, உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்தவர்களின் விவரங்கள் குறித்த தகவல் அமெரிக்காவிடம் இல்லை என்பதை என்னால் ஒருபோதும் நம்ப முடியவில்லை. அதற்கு சாத்தியமே இல்லை. அந்தக் கப்பல்களில் எத்தனை இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இருந்தனர் என்பது அமெரிக்கக் கடற்படைக்குத் துல்லியமாகத் தெரியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். கப்பல்கள் தங்கள் உத்தரவுகளைப் பின்பற்றத் தவறினால் அவற்றை கைப்பற்றித் தடுத்து வைத்திருக்கலாம் என்றார்.இந்த நிலையில் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல்கள் மீதான தாக்குதலை அடுத்து அமெரிக்க துணைத் தூதர் ஜேசன் மீக்சை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் வரவழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது.